அசோக் காலிங் அசோக் – பகுதி 4

Raja 2014-03-06 Comments

அதையெல்லாம் கேட்டபிறகு, என்னால் அந்த ஆளை நான்தான் என்று நம்பாமல் இருக்க முடியவில்லை. ஆரம்பத்தில் அந்த ஆள் மீது இருந்த கோபமும், எரிச்சலும், பயமும் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை விட்டு விலகின. மிக இயல்பான குரலிலேயே அவரிடம் பேச ஆரம்பித்தேன்.

“சரிய்யா.. நீ இவ்ளோ சொன்னப்புறம்.. நீதான் நான்னு எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு..”

“தேங்க்ஸ் ஜூனியர்..!!”

“என்னது..? ஜூனியரா..?”

“ஆமாம்.. ரெண்டு பேர் பேரும் ஒண்ணா இருக்குறதால.. படிக்கிறவங்களுக்கு குழப்பம் வந்துடக் கூடாது பாரு.. அதனால இனிமே நான் உன்னை ஜூனியர்னு கூப்பிடுறேன்.. நீ என்னை சீனியர்னு கூப்பிடு.. ஓகேவா..?”

“ம்ம்ம்ம்.. எல்லாம் என் நேரம்.. சரி.. கூப்பிட்டு தொலைக்கிறேன்..!! ஆனா.. உன் மேல முழுசா இன்னும் நம்பிக்கை வரலை மவனே..”

“ஏன்..??”

“என்னைப் பத்தி டீடெயில் சொன்ன.. சரி..!! ஆனா.. நீ ஃப்யூச்சர்ல இருந்துதான் கால் பண்ணுறேன்னு நான் எப்படி நம்புறது..? அதையும் ப்ரூவ் பண்ணிக்காட்டு..”

“ஹ்ஹாஹ்ஹா.. அது சப்பை மேட்டர் ஜூனியர்.. இரு வர்றேன்..”

சொல்லிவிட்டு சீனியர் அமைதியானார். நான் செல்லுக்கு காது கொடுத்தவாறு காத்திருந்தேன். சில வினாடிகளில் அந்தப்பக்கம் ஏதோ பேப்பர் புரட்டப்படும் சத்தம் கேட்டது. நான் பொறுமை இல்லாமல் கத்தினேன்.

“சீனியர்.. என்னை இந்தப்பக்கம் லைன்ல வெயிட் பண்ண சொல்லிட்டு.. நீ அந்தப்பக்கம் நியூஸ் பேப்பர்ல ராசிபலன் பாத்துட்டு இருக்கியா..?”

“நியூஸ் பேப்பர் இல்ல ஜூனியர்.. டைரி..!!”

“டைரியா..?”

“ம்ம்.. என்னோட 2011 டைரி.. ஐ மீன் நாம எழுதின டைரி..”

“எது..? நான் இப்போ அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி எழுதினேனே.. அந்த டைரியா..?”

“ஆமாம்..”

“இருபத்து நாலு வருஷமா.. இன்னும் அதை பத்திரமா வச்சிருக்கியா..?”

“யெஸ் யெஸ்..!! அந்த டைரியை வச்சுத்தான் நீ கரெக்டா செல்போன் வாங்கின டேட்டுக்கு என்னால கால் பண்ண முடிஞ்சது.. அதுமில்லாம அந்த செல் நம்பரும் இந்த டைரி மூலமாத்தான் ஞாபகப் படுத்திக்கிட்டேன்..!! இரு.. அதுல நாளைக்கு என்ன எழுதிருக்கேன்னு பாத்து சொல்றேன்..!! நாளைக்கு அது நடக்குதா இல்லையான்னு பாரு..!! நடந்துச்சுனா என்னை நம்பு..!!”

என்ன நடக்கிறது என்று இப்போது எனக்கு இப்போது ஓரளவு தெளிவு வந்திருந்தது. ஐந்து நிமிடங்கள் முன்புதான் இன்று நான் செல்போன் வாங்கிய மேட்டரையும், என் செல்போன நம்பரையும் அந்த டைரியில் எழுதியிருந்தேன். அது இருபத்து நான்கு ஆண்டுகள் கழித்து, என் சீனியர் என்னிடம் கால் பண்ணிப் பேசுவதற்கு யூஸ் ஆகியிருக்கிறது. நான் அந்த மாதிரி தீவிரமாக திங்கிங் செய்து கொண்டு இருந்தபோதே, சீனியரின் குரல் கேட்டது.

“நாளைக்கு உனக்கு சண்டேதான ஜூனியர்..?”

“ஆமாம்..”

“ஒரே ஒரு மேட்டர் தான் எழுதிருக்கு.. இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் மேட்ச் பத்தி இருக்கு.. இந்தியா ஜெயிச்சிருக்காங்கன்னு எழுதிருக்கேன்..!!”

“நெஜமாவா சொல்ற..? நாளைக்கு இந்தியா ஜெயிக்கப் போவுதா..?” நான் சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியாமல் கேட்டேன்.

“ஆமாம் ஜூனியர்.. கண்டிப்பா ஜெயிக்கும்..”

சீனியர் உறுதியாக சொல்ல, எனக்கு சந்தோஷத்தோடு சேர்த்து மனதுக்குள் வேறுமாதிரி எண்ணங்களும் விறுவிறுவென ஓடின. அது என்னவென்று சொல்கிறேன்.. நாங்கள் தங்கியிருக்கும் வீட்டின் ஹவுஸ் ஓனருக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவள் பெயர் பிங்கி..!! கல்லூரி முதலாண்டு படிக்கிறாள். சரியான கிரிக்கெட் பைத்தியம். கிரிக்கெட் உருவான காலத்தில் இருந்து இன்று வரை.. எல்லா புள்ளி விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பாள். கட்டினால் கபில்தேவ் மாதிரி ஒரு ஆளைத்தான் கட்டுவேன் என்று கனவில் இருக்கிறாள்.

எனக்கும் கிரிக்கெட் பிடிக்கும். அவளும் நானும் அடிக்கடி கிரிக்கெட் சம்பந்தமாக பெட் கட்டி விளையாடுவோம். எல்லாம் அஞ்சு ரூபா, பத்து ரூபா பந்தயந்தான். ஆனால் ஒருநாள் கூட நான் ஜெயித்ததே இல்லை. ஏற்கனவே நடந்த மேட்ச்களை பற்றி அவள் சரியாக ஞாபகம் வைத்திருப்பதால் பாதியை இழந்திருக்கிறேன். நடக்கப் போகும் மேட்சுகளை பற்றியும் சரியாக கணிப்பதால் மீதியை இழந்திருக்கிறேன். இழந்தவற்றை மீட்க இப்போது ஒரு கோல்டன் ஆப்பர்ச்சூனிட்டி..!! நாளைக்கு எனக்கு வரவு வரப்போவதை எண்ணி இப்போதே நான் குஷியானேன். சீனியரிடம் கேட்டேன்.

“சீனியர்.. உன் பேங்க் பேலன்ஸ் எவ்வளவுன்னு கொஞ்சம் சொல்லேன்..”

“ஏன் கேக்குற..?”

“சும்மா சொல்லு.. ஏன் கேட்டேன்னு நாளைக்கு சொல்றேன்..”

“அஞ்சரை கோடி அப்பீஸ்..!!”

“என்னது..? அப்பீஸா..? உன் நாக்குல பல்லி மூச்சா போயிடுச்சா சீனியர்..? ருப்பீஸை அப்பீஸ்னு சொல்ற..?”

“ஐயோ.. அது அப்பீஸ்தான்டா..!! அஞ்சு வருஷம் முன்னாடி.. உலகத்துல இருக்குற எல்லா கரன்சியையும் ஒண்ணா மெர்ஜ் பண்ணிட்டாங்க.. இப்போ அப்பீஸ்தான் யுன்வர்சல் கரன்சி..!!”

“ஓ..!! உலகம் ஃபுல்லா ஒரே கரன்சியா..? நம்பவே முடியலையே… ஆமாம்.. யார் இந்த தேவையில்லாத வேலைலாம் பண்றது..?”

“எல்லாம் அந்த அமெரிக்காகாரனுகதான்..!!”

“அப்பீஸ்னா என்ன மீனிங்காம்..?”

“அப்பீஸூக்கு மீனிங் கேட்டா.. அணுகுண்டு போட்ருவோம்னு மெரட்டிருக்கானுக..”

“கிழிஞ்சது.. இருபத்தஞ்சு வருஷம் ஆகியும் இன்னும் திருந்தலையா அவனுக..?”

“ம்ஹூம்..!!”

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top